தமிழகத்தில் 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு தமிழக முதல்வரிடம் பரிந்துரை!
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வரும் 24ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் வகையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை தொடங்கியது.
பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது. ஜூன் முதல் வாரத்திற்குள் கொரோனா தொற்று உச்சத்தைத் தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழக அரசின் நடவடிக்கையால் பரவல் வேகம் ஓரளவு குறைந்திருக்கிறது. கொரோனா தொற்று பரவலின் வேகத்தைக் கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்படும் என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளது.