சென்னை கிரீன்வேஸ் அரசு பங்களாவில் தங்குவற்கு எடப்பாடிக்கு தமிழக அரசு அனுமதி!
தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சி செய்தது. இந்நிலையில், 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் 159 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள அரசு பங்களாவை அங்கிருந்த அதிமுக அமைச்சர்கள் காலி செய்ய தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி, அங்கேயே தங்குவதற்கு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனையடுத்து, எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில், பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வம் அவகாசம் கேட்டுள்ளார். அதே சமயம் மற்ற அமைச்சர்கள் பங்களாவை காலி செய்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்த பிறகு புதிய அமைச்சர்கள் அங்கு குடியேற உள்ளனர்.
