தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? முதல்வர் ஸ்டாலின் இன்று 12 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை!
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு வரும் 24ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும்தான் ஒரே தீர்வு என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் விஜயபாஸ்கர், ஈஸ்வரன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை செய்கிறார்.