தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் வேண்டுகோள்!

tamilnadu-politics
By Nandhini May 21, 2021 04:28 AM GMT
Report

தமிழக அரசு கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்துள்ளது. இந்தத் தொற்றை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதற்குரிய மருந்துகளை உடனடியாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் , வென்டிலேட்டர் தங்கு தடையின்றி கிடைக்கும். பெயரளவில் இருக்கின்ற ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை மக்கள் எடுத்துச் செல்லவும், தடுப்பூசியை அதிக அளவில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கருப்பு பூஞ்சை என்ற தொற்றுநோய் தற்போது இந்தியாவில் பரவி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை இந்த நோயினால் 9 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே சமயத்தில் மதுரையில் மட்டும் 50 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட இருப்பதாகவும் உயிர்க்கொல்லி நோயான கருப்பு பூஞ்சை என்ற நோய் தொற்று நோய் சட்டத்தின் கீழ் பட்டியலிட அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இதற்கு amphotericin b என்ற மருந்தினைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்றாலும் ‘முளையிலேயே கிள்ளி எறி’ என்ற பழமொழிக்கேற்ப இதனை ஆரம்பத்திலேயே போக்கும் வகையில் அதற்கு உரிய மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.