காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!
காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி மீன்பிடிக்கச் சென்ற போது, அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலில் சிக்கி அவர்கள் வந்த விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தகவல்கள் வெளியானது.
இதை கேள்விப்பட்ட சாமந்தான்பேட்டை கிராம மக்கள், காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக்கோரி 2 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் தமிழக முதல்வரிடம் தகவல் கொடுத்துள்ளார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடற்படை, விமானப்படை மூலம் மீனவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து மீட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.