Teachers Day: ஆசிரியர்கள் தினம் 2023 - தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தினம்
ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களை நமக்கு கற்பித்து தனது, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் தான் திகழ்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1888 அன்று பிறந்தார். அவரின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்தான் செப்டெம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.
இந்நிலையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில் "தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.
கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுஉள்ளர் பதிவில் "நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியையும்,வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத்தந்து, மாணவச் செல்வங்களை பட்டைத் தீட்டிய வைரமாக ஒளிரச் செய்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க
அடித்தளமிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்களுடைய சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
விஜயகாந்த்
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "அறியாமை எனும் இருள் நீக்கி, அறிவு எனும் ஒளி ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.