சசிகலா இல்லை, எம்.எல்.ஏக்கள் தான் என்னை முதல்வர் ஆக்கினர்- ஈ.பி.எஸ் அதிரடி பேச்சு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலை ஆக இருக்கிறார்.
இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அரசியல் களம் எந்த மாதிரியான மாற்றங்களைச் சந்திக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சசிகலா முதல்வராக பதவி ஏற்பதாக அறிவித்த பிறகு சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார். அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார்.
சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சசிகலா என்னை முதல்வராக தேர்வு செய்யவில்லை, கட்சிக்குப் பங்காற்றியதற்கும், தலைமைக்கு விசுவாசமாக இருந்ததற்கும் எம்.எல்.ஏக்களே என்னை முதல் வராக தேர்வு செய்தனர்” என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.