போலீஸ் என்றால் சும்மா இல்லை..கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் மீட்ட தஞ்சை போலீஸ்
தஞ்சையில் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடிய பெண்ணை போலீசார் 30 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த குணசேகரன் ராஜலட்சுமி தம்பதியினர் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ராஜலட்சுமிக்கு கடந்த 4ஆம் தேதி தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்டது.
இதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதில் ஒரு தனிப்படை சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
கடத்திய பெண் மெடிக்கல் சென்று குழந்தைக்கு டயாப்பர் வாங்கியுள்ளார்.அப்போது அந்த பெண்ணிடமும் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள் மொபைல் எண் கேட்டுள்ளனர்.
அந்த பெண்ணும் தள்ளுபடி கிடைக்கும் என ஆசைப்பட்டு, தனது மொபைல் எண்ணை வழங்கியுள்ளார். இதனை கண்டுபிடித்த போலீசார், அந்த எண்ணை சோதித்த போது, அது பயன்பாட்டில் இல்லாத எண் என தெரியவந்தது.
அதே நேரம் நாம் ஒரு புது சிம் வாங்கும் போது, ஏற்கனவே பயன்படுத்தும் எண், அல்லது மாற்று எண் ஒன்றையும் வழங்க வேண்டும்.
அந்த அடிப்படையில் அந்த பெண் கொடுத்த மொபைல் நம்பரின் மாற்று எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மாற்று எண் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது.
அதே நேரம் அந்த மாற்று எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த எண்ணில் இருந்து யாருக்கு அழைப்பு போய் உள்ளது அல்லது வந்துள்ளது என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர்.
அப்போது, அந்த எண்ணுக்கு அடிக்கடி வந்த ஒரு அழைப்பை கண்டுபிடித்தனர். அந்த அழைப்பை விடுத்தவரின் மொபைல் எண் மூலம் அந்த நபரை நெருங்கிய போலீசார், அவர் மூலம் குழந்தையை திருடிய பெண்ணை கண்டுபிடித்தனர்.
30 மணி நேரத்தில் போலீசார் மிக தீவிரமாக செயல்பட்டு, தாயிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்பி ரவளி பிரியா உத்தரவின் பேரில், டிஎஸ்பி கபிலன் மற்றும் ஆய்வாளர்கள்,
உதவி ஆய்வாளர்கள் அடங்கிய போலீஸ் படை இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.