உயிருக்கு போராடிய நிலையில் பேச முயன்ற பிபின் ராவத்?
நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், நாட்டின் முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்திருக்கிறார் என்பதோ, அவர் இந்த தேசத்தில் அவர் எவ்வளவு முக்கியமானவர் என்ற விபரமோ கிராம மக்களுக்கு தெரியவில்லை.
விபத்து நடந்த இடத்தில், மீட்பு பணியில் ஈடுபட்ட முபாரக், சந்திரகுமார் உள்ளிட்ட கிராம மக்கள் சிலர், ஓரிரு நபர்கள் உருக்குலைந்த நிலையிலும் உயிருடன் இருந்ததை பார்த்துள்ளனர்.
அதில் ஒருவர் தங்களுடன் பேச முயன்றதாக தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய பிபின் ராவத்தின் உடல் மட்டுமே பெரும்பாலும் சிதையாமல் இருந்தது. அவர் தான் இறுதி சமயத்தில் உயிருக்கு போராடிய நிலையில், மக்களிடம் ஏதாவது பேச முயற்சி செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் சமூக சேவகர் முபாரக் கூறியதாவது -
விபத்து நடந்த இடத்திற்கு நாங்கள் உடனடியாக வந்துவிட்டோம். அதன் பிறகே, ராணுவம், வனத்துறை அதிகாரிகள் வந்தனர். 2 பேர் கீழே விழுந்து கிடந்தார்கள். முதலில், உள் இருந்தவர்களை மீட்டு வாகனத்தில் அனுப்பி வைத்தோம்.
இன்னும் சிலரின் உடல்கள் நெருப்பில் உருக்குலைந்து போயிருந்தன. கீழே விழுந்து சிதைந்ததால், கை, கால் என உறுப்புகளை தனியாக சேகரித்து எடுத்து வந்தோம். மொத்தம், 14 பேரில், 8 பேர் ஓரளவு இருந்தனர்; மீதமுள்ளவர்களில் யாருடைய உடம்பு, யாருடைய தலை என்று தெரியவில்லை.
சிதைந்து இருந்ததால் மூட்டை கட்டியே எடுத்து வந்தோம். நான் போனபோது, 2 பேர் உயிரோடு இருந்தனர். அதில் ஒருவர் பேசினார். ஆனால், அவரது உடலும் உருக்குலைந்து தான் இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.