ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைப் பதிவு - நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரியில், கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களின் மறைவிற்கு நாடு முழுவதும் பலர் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில், சிலர் பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.
இதனால், விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்திய விமானப்படை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கீரனூர் காவல் நிலையத்தில் புகார் ஓன்று கொடுக்கப்பட்டது.
அந்த புகாரில், பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் விமர்சனம் செய்தததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரை வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலசுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.