7-வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று 7வது முறையாக பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக தொற்று மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக பரோலில் வெளியே வந்தார்.
கடந்த மே மாதம் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பேரறிவாளன், அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகளுக்கு சென்று பேரறிவாளன் சிகிச்சையும் பெற்று வருகிறார்.
மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு கூடுதலாக பரோல் தேவைப்படுவதாக ஒவ்வொரு முறையும் அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அந்த வகையில் 6வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அவரது தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பேரறிவாளனுக்கு 7-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.