ஒலிம்பிக்கில் பங்கேற்ற 2 தமிழக வீராங்கனைகளுக்கு அரசு வேலை - தமிழக முதலமைச்சர் அதிரடி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனைகளான தனலட்சுமி, சுபா ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் அரசுப்பணி கிடைத்துள்ளது.
டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4 - 400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்கள். திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன்பு தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 4 - 400 கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காகத் தேர்வாகியுள்ளேன். எனக்கு இது மகிழ்ச்சியாக உள்ளது.
என் நன்றியைப் பயிற்சியாளருக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்துள்ளார்.
பதக்கங்கள் பெற்று இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்துவேன். தமிழக அரசு எனக்கு ஒரு வேலை வழங்கினால் உபயோகமாக இருக்கும். ஒரு போட்டிக்குச் சென்றால் எனக்கு ரூ. 20,000 செலவாகும். எனக்கு வேலை கிடைத்தால் எனக்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்வேன். எனவே தமிழ்நாடு அரசு எனக்கு ஒரு வேலை கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தனலட்சுமி, சுபா ஆகிய இருவருக்கும் அரசு வேலை கிடைத்துள்ளது. இதற்கான பணி நியமன ஆணைகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
ஒலிம்பிக் 2020ல் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீராங்கனைகள் தனலட்சுமி, சுபா ஆகியோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.