ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்
சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தப்பித்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சராக இருந்தவர்தான் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவினில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால், அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க ஏற்கெனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
ராஜேந்திர பாலாஜி தென்காசி மாவட்டம் குற்றாலம் அல்லது கேரளாவில் பதுங்கி இருக்கக்கூடும் என்று கூறப்படும் நிலையில், 3 தனிப்படைகளும் அங்கு விரைந்துள்ளன.
ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் 600க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.