தவெக கூட்டணியில் இணைந்த முதல் கட்சி - எந்த கட்சி தெரியுமா?
தவெக கூட்டணியில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி இணைந்துள்ளது.
தவெக
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
அதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் அறிவித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை விஜய் வெளியிட்டார். இதனை தொடர்ந்து கட்சியை பலப்படுத்தப்படுத்த மார்ச் மாதம் மாநில அளவில் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
மாநில மாநாட்டில் பேசிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கும் என கூட்டணியில் சேர கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் எந்த கட்சியும் கூட்டணிக்கு முன் வராத நிலையில், தற்போது தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர்.
முஸ்தபா
இது குறித்து பேசிய தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா அவர், "திருப்பரங்குன்றம் விவகாரம், வக்பு வாரிய சொத்து மீட்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் திமுக இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகிறது. விஜய் கட்சியில் துணை தலைவர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இஸ்லாமியர்களை அமர்த்தி இருக்கிறார். குறிப்பாக மாநில மாநாட்டிலேயே ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை மேடையில் அமர வைத்தார்.
மேலும் பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்தது எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. அதன் காரணமாகவே அவருடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். மேலும், ரம்ஜான் நோன்பு திறப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். கண்டிப்பாக கலந்து கொள்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.