சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

M K Stalin Tamil nadu Narendra Modi
By Nandhini Jul 29, 2022 11:05 AM GMT
Report

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது -

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும். இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை இந்தியப் பிரதமர் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் இந்தியப் பிரதமர் காட்டிவரும் ஆர்வத்தை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும். செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியப் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

2024ம் ஜனவரி மாதம் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

modi - stalin