இன்று மக்களின் பேரன்பை பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள்
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் அந்த 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி பிறந்தார். சிறுவயது முதல் நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், 1936ம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இதைனையடுத்து, 1950ம் ஆண்டு மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி மற்றும் மந்திரகுமாரி ஆகிய படங்களின் வாயிலாக பலரும் பாராட்டத்தக்க கதாநாயகனார் எம்ஜிஆர். தொடர்ந்து 30 ஆண்டுகள் திரைத்துறையில் முடிசூடா மன்னனாக வலம் வந்த எம்ஜிஆர். பின்னர் அரசியலிலும் இறங்கி மாபெரும் வெற்றி பெற்றார்.
1953ம் ஆண்டு திராவிட இயக்கத்தில் இணைந்த எம்ஜிஆர் 1972ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சிறு சேமிப்பு திட்ட துணை தலைவராகவும், 1967ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ,1969 திமுகவின் பொருளாளராகவும் பணியாற்றினார்.
இதனையடுத்து, அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, இவரின் நண்பர் கருணாநிதி உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து, 1972ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
பிறகு, 1972ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 1977ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 1977 முதல் 1987ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சியை நடத்தினார்.
சத்துணவு திட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, முதியோருக்கு இலவச வேட்டி சேலை, சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை தமிழகத்திற்கு வகுத்து கொடுத்தவர் எம்ஜிஆர் தான்.
இந்நிலையில், எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக அரசு சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது.
சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்த இருக்கின்றனர்.