எனது ஞானத்தந்தையை இழந்துவிட்டேன் - நடிகர் சிவக்குமார் உருக்கம்!
பிரபல எழுத்தாளர் கி.ரா. மறைவிற்கு நடிகர் சிவக்குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். புதுச்சேரி பல்கல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்தார் கி.ராஜநாராயணன். இவர், கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார்.
கரிசல் மண் சார்ந்த இவரின் எழுத்துக்களால், கி.ரா., கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். மறைந்த கி.ரா.வின் உடல் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இன்று கருவடிக்குப்பம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது -
நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன்; தற்போது எனது ஞானத்தந்தை இழந்துள்ளேன்.
எனக்கும், எழுத்தாளர் கி.ரா.வுக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல் காட்டுக் கடுதாசி, வட்டார வழக்குச் சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளில் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
