தமிழகத்தில் இரவு நேரம் மற்றும் வார இறுதி ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு
தமிழகத்தில் இரவு நேரம் மற்றும் வர இறுதி ஊரடங்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்தார்,
அந்த மனுவில் தெரிவித்திருந்தாவது,
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் சில மாதங்கள் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது.
இதனால் தமிழக மக்கள் பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர். பலருக்கு வேலை இழப்பு கூட ஏற்பட்டது. அதன் பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சற்று பழைய நிலை திரும்பியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மக்கள் மீண்டும் கடந்தாண்டு போன்ற ஊரடங்கை தாங்கிக்கொள்ள முடியாது.
இரவு நேர ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.