நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரும் 29-ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் - தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரும் 29-ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துவது தொடர்பாக
மாநில தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்த நிலையில் தேர்தலுக்கான தேதி விவரங்களை நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் வரும் ஜனவரி 28-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி நிறைவடையும் எனவும், வேட்பு மனுக்கள் பரிசீலனை பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்ரவரி 7-ம் தேதி என தெரிவித்த அவர் வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் தான் தற்போது வரும் 29-ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.