ஊரக உள்ளாட்சி தேர்தலில் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்

tamilnadu election
By Fathima Sep 23, 2021 05:36 PM GMT
Report

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று, அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஒட்டுமொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை விவரம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பதவி வாரியாக வேட்புமனுக்கள் விவரம், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15,967 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அதேபோல், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 பேரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனு திரும்பப்பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.