மேலூர் நகராட்சியில் ஹிஜாப் விவகாரம் - மாநில தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி
மதுரை, மேலூர் நகராட்சியில் வாக்களிக்க ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணின் உடையை பாஜக பிரமுகர் அகற்ற கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, அரசியல் கட்சியினர் வாக்குவாதம் என வாக்குப்பதிவு தாமதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு அல்-அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி பாஜக தேர்தல் முகவர் கிரிராஜன் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மாநில தேர்தர் ஆணையர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்ன உடை அணிந்து வர வேண்டும் என்பது அவரவரின் விருப்பம் என்று பேட்டி அளித்துள்ளார்.