தமிழக சட்டப்பேரவை தேர்தல்: எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் தெரியுமா?
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,003 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில் 6,183 பேர் ஆண்கள், 1,069 பேர் பெண்கள், மூன்று பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் மனு தாக்கல் செய்த 7,255 பேரில் 2,801 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இந்த தேர்தலில் அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள், குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறையில் ஆறு வேட்பாளர்கள் களம் காணுகிறார்கள். இதில் கரூர் தொகுதியில் 97 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 7 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இறுதியாக 77 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொகுதியில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, இந்திய கணசங்கம் கட்சி, சாமானிய மக்கள் நல கட்சி ஆகியவை சார்பில் தலா ஒரு வேட்பாளரும் சுயேச்சை வேட்பாளர்கள் 68 பேரும் களத்தில் உள்ளனர்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் வி. செந்தில்பாலாஜி களம் காண்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் எஸ். மோகன்ராஜ் ஆகியோர் களம் காண்கிறார்கள்.