‛கமலிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டது குறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று நான் கூறவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 22ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, சிகிச்சைக்கு பிறகு, அவர் கடந்த 4ம் தேதி வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய உடனே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இது சர்ச்சையாக மாறியது. சாதாரண நபர் கொரோனாவிலிருந்து மீண்டாலும், மருத்துவமனையில் 7 நாட்களும், வீட்டில் 7 நாட்களும் என மொத்தம் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் கமல்ஹாசன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் எப்படி தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்று கேள்வி எழுந்தது.
இது குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், கமல்ஹாசனிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
தற்போது, ராதாகிருஷ்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால், அவருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அவர் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதனால், அதுதொடர்பாக அவரிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.