முதல்வரே கொஞ்சம் மாறுவேடத்தில் வந்து பாருங்க... திமுக அரசை மக்கள் எப்படி திட்டுறாங்கன்னு தெரியும் - ஜெயக்குமார்
திமுக ஆதரவு சசிகலாவிற்கு உள்ளதால்தான் அவர் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சிக்கு எந்த ஒரு சமந்தமும் இல்லாமல் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிக்கை அளித்து வரும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்தார்.
இதன் பின்பு, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் பேசியதாவது -
திமுகவின் ஆதரவு இருப்பதால் தான் சசிகலா மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர், திமுகவின் 'பி டீம்' ஆக இருக்கலாம்.
அம்மா மினி கிளினிக் பொருத்தவரை ஆயிரத்து 800 மருத்துவர்கள் நியமனம் செய்தோம். பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக முதற்கட்ட சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் பல இடங்களில் நானே அதனை திறந்து வைத்தேன். அதை நான் காண்பிக்க தயார். அவர் என்னோடு வருவாரா? அரசர்கள் மாறுவேடத்தில் செல்வது போல், முதல்வர் ஸ்டாலின், ரேஷன் கடைகளுக்கு மாறு வேடத்தில் செல்ல வேண்டும்.
அப்போதுதான், பொது மக்கள் அரசை எப்படி எல்லாம் பேசுகின்றனர் என்று அவர் தெரிந்துகொள்வார். பொங்கல் பரிசு பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் வாங்காமல் வடமாநிலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.