"தமிழகத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம்" சர்ச்சைக் கிளப்பும் இந்து முன்னணி நிர்வாகி
தமிழகத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசியவர், ”திருச்சியில், ராமகோபாலனுக்கு மணிமண்படம் கட்டுவதற்காக வரும் 25-ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க தமிழகத்திலுள்ள ஆன்மிகவாதிகள், சமுதாயப் பெரியவர்கள் மற்றும் இந்து மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்சி. குரூப்-1 முதல்நிலைத் தேர்வில், நல்ல கேள்விகளை கேட்காமல், பெரியார் வாழ்க்கை மற்றும் சாதியைத் தூண்டும் வகையில் திரைப்படங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இது கண்டனத்திற்குரியது. இது, அரசுத்துறைகளிலும் நாத்திவாதிகள் ஊடுருவிட்டதையே காட்டுகிறது. இனி வரும் காலத்தில், நடிகை ஜோதிகா, நக்மா போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த கேள்விகள் கேட்கவும் வாய்ப்பு உள்ளது.
மேலும், வரும் தேர்தலில் கலவரத்தை தூண்டும் வகையில், தேனி மற்றும் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் பயிற்சி பெற்று வருகின்றனர் என பரபரப்பு புகார் தெரிவித்தார். அதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் வசித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.