சீனாவிலிருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்கள் தமிழகம் வருகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு

1 month ago

ஜாம்செட்பூரிலிருந்து நாளை 40 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு வருகை. தொழில்நுட்ப கோளாறால் தடைப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகள் மூன்று நாட்களில் சரி செய்யப்படும் என தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமல நாச்சியார் புரத்தில் உள்ள நியாய விலைக்கடையில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் சிறப்பு கொரோனா நிதியுதவி முதல் தவணை ருபாய் 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 27 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ருபாய் 115 கோடி நிவாரணம் வழங்கப்பட உள்ளது .தமிழகத்தில் தொழில்த்துறை மூலம் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி தொழில் நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக தடைபட்டுள்ளது, மூன்று நாட்களில் அவை சரிசெய்யப்படும்.

மேலும் இந்த 40 மெட்ரிக் டன்னை ஈடுகட்டும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்பட்டு தேவைப்படும் இடங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆக்ஸிஜன் உற்பத்தியில் உள்ள நிறுவனங்களிடம் கூடுதலாக உற்பத்தி செய்ய வலியுறுத்தி வருகிறோம். நெதர்லாந்து நாட்டிலிருந்து 20 மெட்ரிக்டன் கொள்ளவு கொண்ட 4 தாழ் வெப்பநிலை கொதிகலன்கள் இறக்குமதி செய்து துர்காபூரிலிருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் வரப்பெற்றுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஜாம்செட்பூரிலிருந்து நாளை 2 கண்டெய்னர்களிலிருந்து 40 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் நாளை வர உள்ளது. காலியாகும் சிலிண்டர்களை உடனடியாக திருப்பி அனுப்பி மீண்டும் நிரம்பி வாங்கப்படுவதால் இரண்டு நாட்களில் ஆக்ஸிஜன் தேவை பூர்த்தியாகும் என்றார்.

தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்பரேஷன் மூலம் சீனாவிலிருந்து 12 கண்டெய்னர்கள் கொண்டுவர உள்ளதாகவும், நான்கைந்து நாட்களில் 5 ஆயிரம் ஆக்ஸிஜன் கான்சன்ரேட்டர்ஸ் தொழில்த்துறை மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்