தொடரும் கனமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 12 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அதேபோல பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 12 மாவட்டத்திற்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனையின் பேரில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த ஆணையில், டிஜிபி சங்கர் ஜிவால் சென்னை மாவட்டம், ஏடிஜிபி ஜெயந்த் முரளி காஞ்சிபுரம் மாவட்டம், ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி வேலூர் மாவட்டம், ஐஜி கபில் குமார் சரட்கர் விழுப்புரம் மாவட்டம், ஏடிஜிபி அபய் குமார் சிங் சேலம் மாவட்டம், ஏடிஜிபி வன்னியபெருமாள் கோயம்புத்தூர் மாவட்டம் உட்பட 12 மாவட்டத்திற்கு ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
மாற்று அதிகாரிகளாக ஐஜிக்கள் அருண் மற்றும் தினகரன் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு உறுதுணையாக ஐஜி சஞ்சய் குமார் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் களத்திற்கு சென்று மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.