உள்ளாட்சி தேர்தல் எப்போது? தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் விளக்கம்
tamilnadu govt says localbody election delay due to census: மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த தாமதமாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் மாநகர, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து தேர்தல் நடத்த தாமதமானால் அதுவரை நிர்வாக பணிக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ஆர். பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறித்த காலத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகளை முடித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு விளக்கம்
இந்த மனு இன்று நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் சட்டப் பிரிவு மீறப்பட்டுள்ளது, சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என மனுதாரர் வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 ஆம் ஆண்டில்தான் முடிவடைய உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்தப் பிறகுதான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, அதன்பின்னர் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டு பின்னர் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, வார்டு மறுவரையறை செய்ய 120 நாள்களும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய 30 நாள்களும், தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்கு 90 நாள்கள் என மொத்தம் 240 நாள்கள் தேவைப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள தனியார் நிறுவனங்கள்: பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு IBC Tamil