கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை - மருத்துவர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு அதிரடி திட்டம்
மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமல்படுத்தியுள்ளது.
பெண் பயிற்சி மருத்துவர் கொலை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் பயிற்சி மருத்துவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி மருத்துவமனையில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
மருத்துவமனை பாதுகாப்பு
இதனையடுத்து மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதன் படி தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாயம் காவல் மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை கமிட்டி மற்றும் பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களை தாக்கினால்மருத்துவ பணியாளர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்க வேண்டும்.
மேலும் மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். இரவு நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையை சுற்றி மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.