கடலுக்கு நடுவே 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் : தமிழக அரசு திட்டம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை என்றென்றும் போற்றும் வகையில் மெரினா கடலில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்டமான பேனா வடிவ நினைவுச் சின்னம் கட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார்.
அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ₹39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரமாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கலைஞரின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது.
இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் நடுக்கடலில் ₹80 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவ நினவுச் சின்னம் ஒன்றை 134 அடி உயரத்திற்கு அமைக்கத் திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு தற்போது தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் இத்திட்டத்திற்கான விண்ணப்பம் ஒன்றிய அரசின் நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.