தமிழகத்தில் சனாதன தர்மம் வளமோடு இருந்தது; யாராலும் அழிக்க முடியாது - ஆளுநர் ஆர்.என். ரவி!
சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
சனாதன விவகாரம்
சமீபத்தில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசினார். அவரின் பேச்சு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜகவை சேர்ந்தவர்களும், மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் அவரின் பேச்சுக்கு கண்டனங்களும் தெரிவித்து வந்தனர்.
உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தரப்படும் என அறிவித்தார்.
மேலும் அதை ரூ.25 கோடியாக உயர்த்தினார். இது பெரும் சர்ச்சையானது. உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இருந்தும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சனாதனம் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
ஆர்.என். ரவி பேச்சு
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை அண்ணாநகர் பாலிமர் மடத்தில் சனாதன உற்சவ விழாவின் நிறைவு நாளில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது "சிலர் சுயநலத்திற்காக சனாதனத்தை திரித்து பேசுகின்றனர்.
தமிழகத்தில் சனாதன தர்மம் வளமோடு இருந்தது. சனாதனம் உலகிற்கு தேவையான ஒன்று, சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது. சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது. வேர் இல்லாமல் மரம் வளர முடியாது, சனாதன தர்மம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. சனாதனம் என்னும் அடிப்படையை உடைக்க முயல்வது நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சி.
சனாதனத்தின் முக்கிய பகுதியாக தமிழ்நாடு இருந்ததற்கான சான்று உள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறுபவர்கள், முடிந்தால் முதலில் இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் அழித்துப் பாருங்கள். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர்.
ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை என்று ஆர்.என். ரவி பேசினார். மேலும், அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்பது பாரத் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது' என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன உற்சவ நிறைவு நாள் விழாவில் தெரிவித்தார்.