ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது.
இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில், ஏற்கெனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருபோதும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
எனவே, மத்திய அரசு ஹைட்ரோகார்பன் பணிகளை தமிழகத்தில் அனுமதித்தாலும், அதனை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அரியலூர் மாவட்டம் முழுவதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் வகையில், மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவப்பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கொரோனா காலத்தில் இருப்பதால் நோய்த்தடுப்புப் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டம் தொடங்குவது குறித்து, தமிழக அரசு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.