ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் - தெய்வ தமிழ் பேரவை
கடந்த சில மாதங்களாக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ’கோயில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து, இந்து அறநிலையத் துறையில் இருந்து தமிழகக்கோவில்களை விடுவிக்க வேண்டும் என பிரசாரம் செய்து வருகிறார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் எதிர்வினை ஆற்றி வருகின்றன.அந்த வகையில் தெய்வத்தமிழ் பேரவை என்ற இயக்கத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் அவர்கள் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ”தமிழக கோவில்களை ஜக்கி வாசுதேவ் அவர்கள் முழுவதுமாக கைப்பற்ற நினைக்கிறார்.இந்து அறநிலையத்துறையை கலைப்பதற்காக ஈஷா யோகா மைய குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி தண்ணீர் கர்நாடக மாநிலம் நமக்கு தர வேண்டாம் எனவும் ,மரத்தை நடுங்கள் மழை வரும் என்று கூறி நமது உரிமையை இழக்கச் செய்தார் ஜக்கி வாசுதேவ்.
ஈஷா யோகா மையம் ஆனது ஆன்மீக போர்வையின் கீழ் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. அந்த போர்வையை எடுத்து விட்டால் போதும் அதுவும் ஆன்மீக வழிபாட்டு தலமாக மாறி விடும்.
ஈஷா யோகா மையத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரவேண்டும், இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும்.
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டினால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும், அர்ச்சனை செய்வதற்கு அனைத்து சாதியினரும் தகுதி உடையவர்களே என்ற கோரிக்கையை முன்வைத்தும் மே மாதம் 8ஆம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க போவதாகவும் அறிவித்துள்ளனர். எங்கள் இயக்கமானது நோய்க்கு மருந்து கொடுக்க நினைக்கிறது.
ஆனால் ஜக்கி வாசுதேவ் கொலை செய்யச் சொல்கிறார், தமிழகத்தின் யோகி ஆதித்யநாத் ஆக மாற நினைக்கிறார் ஜக்கி வாசுதேவ் அதற்காக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறார்.
உருவ வழிபாடு இல்லாதவர்கள் எப்படி ஆகமத்தை வளர்க்க முடியும், ஆகம வழி எப்படி பிறந்திருக்க முடியும் எனவும் மற்ற மதங்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் அதற்கு என ஒரே புனித நூல் உள்ளது.
ஆனால் இந்து மதத்தில் ஒரே கடவுள் ஒரே புனித நூல் என்ற கூற்று கிடையாது. ஆகையால் இந்து அறநிலையத் துறையின் கீழ் பொதுவாக செயல்பட்டால் மட்டுமே இது அனைவருக்கும் பொதுவானது ஆகும்.
போலியான விளம்பரங்களின் மூலம் ஆன்மீகத்தை வியாபாரமாக கொண்டிருக்கிறார் ஐக்கி வாசுதேவ். மீண்டும் நம்மை வர்ணாசிரமத்தின் கீழ் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு ஒரு போதும் அவர்களுக்கு அடிபணியாது விரைவில் ஜக்கி வாசுதேவ் அவர்களின் கூற்றுக்கு வருத்தப்படுவார்” எனக் கூறினார்.
