தமிழக அரசின் தலைமை காஜி மறைவு - தலைவர்கள் இரங்கல்
தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தலைமை காஜி மறைவு
தமிழக அரசின் தலைமை காஜியாக பணியாற்றி வந்த சலாவுதீன் முகமது அயூப் சாகிப்(83) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் காலமாகியுள்ளார்.
இவர் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும், எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
இவர் தலைமை காஜியாக பதவியேற்பதற்கு முன்னதாக, சென்னை கல்லூரியில் அரபு பேராசிரியராகவும் இருந்தார். இவரது கொள்ளு தாத்தா காஜி உபைதுல்லா நக்ஷ்பந்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹ்), 1880 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் அரசு தலைமை காஜியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இஸ்லாமிய மாத பிறைகள், ரமலான் நோன்பு, ஈத் பண்டிகைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை அறிவித்து, அவற்றை இஸ்லாமிய சமூகம் எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல் மற்றும் சமய சடங்குகள் மற்றும் பண்டிகைகளை அறிவித்தல், திருமணம், விவாகரத்து (தலாக்), வாரிசுரிமை, வக்பு போன்ற குடும்ப மற்றும் சமூக ரீதியான விஷயங்களில் இஸ்லாமிய சட்டத்தின்படி முடிவுகளை எடுக்க வழிகாட்டுதல் இவரது பணிகளில் ஒன்றாகும்.
இரங்கல்
இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் முகஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர்.
மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்.
அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.