ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - தமிழக அரசு அதிரடி!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மோதல் போக்கு
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் என மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மேலும், தமிழக அரசு அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாக்களை கையெழுத்திட ஆளுநர் ரவி தொடர்ந்து மறுத்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடரவும் ஆளுநர் அதிருப்தி தெரிவித்தார்.
தமிழக அரசு மனு
இது போன்ற செயல்களால் திமுகவினர் ஆளுநர் ஆர்.என். ரவி மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது.
அதில் "குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு அவசர மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனச் சொல்லப்படுகிறது.