கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் ; அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்று மதுரையில் அமைச்சர் மூர்த்தி கூறினார்.
இந்த நிலையில் ,கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அவர் தகவல் தெரிவித்திருந்தார்.
தற்போது கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளை 300 மாடுபிடி வீரர்களை கொண்டு நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பே அனைத்து வீரர்களும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளையுடன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி. அதிகபட்சமாக போட்டியை பார்வையிட 150 பார்வையாளர்களை அனுமதிக்கலாம், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.