தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம்- மக்கள் அவதி
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் என்றும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
அதனையடுத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று முதல் தொடங்கியிருக்கிறார்கள். இதனையடுத்து, போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதேவேளையில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதன் ஆதரவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்துக்கவில்லை. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் சென்னையில் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு கிடையாது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு மின்சார ரெயில் நிலையங்கள் நோக்கி படையெடுத்திருக்கிறார்கள். இதனால் அனைத்து மின்சார ரயில் நிலையங்களிலும் பயணிகள் மிகுதியாகவே காணப்படுகிறார்கள். அதேபோல மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.