தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கனமழை - கடலுக்குச் செல்ல மீனவர்களுக்கு தடை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
மேலும், குமரிக்கடல் பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசும் என்பதால், கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.