கொடைக்கானலில் தொடர்மழையால் விளைச்சல் இல்லை - மலைவாழ் விவசாயிகள் கவலை
கொடைக்கானல் மலை பகுதிகளில், பிளம்ஸ் பழங்களின் சீசன் துவங்கியுள்ளது. ஆனால், கொடைக்கானலில் பெய்த தொடர்மழை காரணமாக விளைச்சலும் இல்லை, விலையும் இல்லை என மலைவாழ் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மலைகளின் இளவரசியாக கொடைக்கானல் திகழ்கிறது. இந்நிலையில், வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் அதிகப்படியாக பல ஏக்கர் பரப்பளவில் பிளம்ஸ் பழங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
பிளம்ஸ் பழங்கள் ஏப்ரல், மே , ஜூன் ஆகிய மாதங்களில் விளையும் காலமாகும். தற்போது கொடைக்கானல் மலை பகுதியில் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் துவங்கி அறுவடை பணியில் கடந்த ஒரு மாதமாக மலைகிராம விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளம்ஸ் பழங்கள் அதிகப்படியாக வருடந்தோறும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதில் மலைகிராம விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவார்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், கொடைக்கானல் பகுதியிலிருந்து பிளம்ஸ் பழங்களை கொரோனா அச்சத்தாலும், டவ்-தே புயல் காரணத்தாலும் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பிளம்ஸ் பழங்கள் கிலோ ஒன்றிற்கு ரூ.30 முதல் 40 ரூபாய் வரை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பிளம்ஸ் விளைச்சல் துவக்கத்தில் அதிகப்படியாக மழை பெய்ததால் விளைச்சல் குறைவாக காணப்படுகிறது.எனவே இதனை தோட்டக்கலை துறையினர் கவனம் செலுத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
