விழுப்புரத்தில் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணித்த மக்கள் - பதற்றமான சூழ்நிலை - ஏராளமான போலீசார் குவிப்பு
தனி ஊராட்சி கேட்டு விழுப்புரம் செஞ்சிக்குட்பட்ட கிராமமொன்றின் மக்கள் உள்ளாட்சித் தேர்தலை மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதி வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைந்திருக்கிறது. இங்கு கடந்த 3 முறை உள்ளாட்சித் தேர்தல் ஏலம் முறையில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
தலைவர் பதவிக்கு ரூ.13 லட்சமும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ. 20,08,000 என ஏலம் விடப்படுவதால், தேர்தல் யாவும் பெயரளவிலேயே நடந்திருப்பதாக ஒரு பகுதி மக்கள் சொல்கிறார்கள். பொண்ணங்குப்பம் ஊராட்சியானது 1,400 வாக்குகள் கொண்ட ஊராட்சி. அதுவே துத்திப்பட்டு கிராமமோ, 2,400 வாக்குகள் உள்ள பகுதி.
இதில் பொன்னங்குப்பம் பகுதியில் வாக்குகள் குறைவாக இருப்பதால், நடந்துக்கொண்டிருந்த ஏல முறை தலைவர் தேர்வில் தனிப்பெரும்பான்மையுடன் துத்திப்பட்டை சேர்ந்த மக்களே உள்ளாட்சி தேர்தலில் தலைவராக, ஒன்றிய கவுன்சிலராக, துணைத் தலைவராக அனைத்து பதவிகளையும் வகித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
துத்திப்பட்டு பகுதி மக்களே பதவிகளை ஏற்று வரும் நிகழ்வு தொடர்ந்து இருந்து வருவதால் பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்களால் எவ்வித ஜனநாயக பதவிகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணர்ந்திருக்கிறார்கள்.
இதனால், பொன்னங்குப்பம் மக்கள் தங்களை தனி ஊராட்சி கோரி கோரிக்கை மனுவினை அதிகாரிகளுக்கு அளித்து வந்திருக்கிறார்கள். ஆனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அப்பகுதியில் உள்ள 7, 8, 9 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவினை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால், அங்கு தேர்தல் புறக்கணிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து அரசு கவனத்திற்காக கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனரும்கூட. அப்போராட்டங்களின் முடிவில், இன்று தேர்தலில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க போவதில்லை எனக் கூறி புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. இதனால் அங்கு பெருமளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.