ஆரம்பமாகும் மனுதாக்கல்..அனல் பறக்க போகும் தேர்தல் களம்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. வருகிற 19-ந் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். 20-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.
22-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மனுத்தாக்கல் நடைபெறாது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் வேட்பாளரும், அவருடன் வருவோரும், மனுத்தாக்கல் மையத்திற்கு 200 மீட்டருக்கு முன் வாகனங்களை நிறுத்த வேண்டும், 100 மீட்டருக்கு முன் வரை மட்டுமே அரசியல் கட்சியினருக்கு அனுமதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் அல்லது அவர் சார்பாக முன்மொழிபவர்கள் என மொத்தம் மூன்று பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதும். அங்கீகரிக்கப்படாத கட்சி, பதிவு செய்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே போல முன் மொழிபவர்கள் அந்த தொகுதி வாக்காளராக இருக்க வேண்டும்.
வேட்பாளர் குற்றப் பின்னணி உடையவராக இருந்தால், கட்டயமாக அவற்றை குறிப்பிட வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் பெயரில் தேர்தல் செலவினத்திற்காக தனி வங்கி கணக்கு துவங்கி அதன் விவரங்களை மனுவுடன் சமர்பிக்க வேண்டும். உறுதிமொழி பத்திரத்தில் அனைத்து பக்கங்களிலும் நோட்டரி வக்கீல் கையெழுத்து பெற வேண்டும்.
தனி தொகுதியாக இருந்தால் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் சாதி சான்றிதழை கண்டிப்பாக இணைக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி வகுப்பை சேர்ந்த வேட்பாளர் என்றால் முன் வைப்பு தொகையாக ஐயாயிரம் ரூபாயும், மற்ற வேட்பாளர்கள் பத்தாயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.
வேட்பாளர் வேறு தொகுதியின் வாக்காளர் என்றால், சம்பந்தப்பட்ட வாக்கு பதிவு அலுவலரால் சான்று பெற்று அதையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சிறு தவறு இருந்தால், அவற்றை 19-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திருத்தி திரும்ப கொடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.