விஜய் மக்கள் இயக்கம் வைத்த கோரிக்கை - நிராகரித்த மாநில தேர்தல் ஆணையம் - நடந்தது என்ன?
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பொது சின்னமான ஆட்டோ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்திருக்கிறது.
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு 115 பேர் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனையடுத்து, இத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட இருக்கிறார்கள்.
இதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பொது சின்னமான ஆட்டோ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது-
இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்கையில், ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே பொது சின்னம் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, விஜய் மக்கள் இயக்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பொது சின்னத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
