உள்ளாட்சி தேர்தல் : தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 2 வேட்பாளர்கள் வெற்றி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

tamilnadu-election
By Nandhini Oct 13, 2021 06:58 AM GMT
Report

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியை தவிர தற்போது பிற மாநிலங்களிலும் காலூன்ற முயன்று வருகிறது. அந்த வகையில் குஜராத், பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 2 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 1381 ஒன்றியக்குழு உறுப்பினர், 2,901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி உள்ளிட்ட 27,003 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது. இதனையடுத்து, ஒரு சில பகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இதில் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை நவ்லாக் ஊராட்சி 6 வது வார்டில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஜீவானந்தமும், வேலூர் மாவட்டம் கொல்லப்பள்ளி ஊராட்சி 2-வது வார்டில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரஷாந்தி என்பவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இது குறித்து, ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது - ‘2021 தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஜீவானந்தமும், பிரஷாந்தி என்பவரும் வென்றதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.