வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனையடுத்து, முதல்கட்ட தேர்தல் அக்.6-ம் தேதி நடந்தது. 2ம் கட்ட தேர்தல் அக்.9ம் தேதி நடைபெற்றது.
இதனையடுத்து, 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 1381 ஒன்றியக்குழு உறுப்பினர், 2,901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி உள்ளிட்ட 27,003 பதவிக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதைப்போல் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 139 இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. மேலும், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பிற பதவிகளுக்கான இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், பல பகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் 2வது நாளாக இன்று நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தமிழக முதலமைச்சர் மு.க.முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது -
“மருத்துவ நெருக்கடி,பொருளாதார நெருக்கடி என்ற இக்கட்டான காலத்தில் திமுக அரசு ஆட்சி அமைந்தது. இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி என செய்தி வருவது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதங்களில் பெற்ற பெருமித உணர்வை அடைகிறேன்.
கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் வாக்களித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படாதவாறு அமையட்டும்” என்று கூறியிருக்கிறார்.