வேட்பாளர் பெயர் மாற்றம் - உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு திடீர் நிறுத்தம்
9 மாவட்டங்களுக்கான, ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
கிராம ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் ஒட்டப்படாதது மற்றும் சிசிடிவி மூலம் கண்காணிப்பதில் எழுந்த தொழில்நுட்பக் கோளாறு, அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குபதிவு தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் லக்ஷ்மி என்பவரின் பெயர் தனலட்சுமி என மாற்றி அச்சிடப்பட்டிருக்கிறது. இதனால் எழுந்த புகாரால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராணிப்பேட்டை சிப்காட் வஉசி நகரிலுள்ள வாக்கு சாவடியில் திமுக - அதிமுக இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. வாக்கு சாவடி அருகே அதிமுகவினர் பேனர் வைத்ததாக கூறி இரு தரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் வாக்குபதிவு நிறுத்தப்பட்டிருக்கிறது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வாக்குப்பதிவு தடை செய்யப்பட்டள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் செங்குறிச்சி பகுதியில் தனி வார்டு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வாக்களர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியுள்ளனர்.
இதுபோன்ற பல காரணங்களால் வாக்குபதிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவை தடையின்றி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது.