தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது, தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்து விடும்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதி களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. தமிழக மக்களின் இதயங்களில் குடிகொண்டிருந்த இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற முதல் சட்டமன்றத்தேர்தல் இது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது.
மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர். மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதன்மூலம்தான் அதிக இடங்களில் ஜெயிக்கப்போவது யார்?, தமிழகத்தில் ஆட்சி மகுடத்தை சூடப்போவது யார்? என்பது தெரிய வரும்.
தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். அவர்களில், ஆண்கள் 2.26 கோடி பேரும், பெண்கள் 2.31 கோடி பேரும் வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட உள்ளன.
கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மேஜைகள் போடப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகடிவ்’ சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அவர்கள்2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானால் முகவர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து, முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும்,

வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக மாலை முதல் நள்ளிரவு வரை ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றிக்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது சென்னை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் நடைபெற உள்ளது.
இங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும் தமிழகம் முழுவதும் துணை ராணுவ படையினர் உள்பட 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
