கெத்து காட்டி... தகாத வார்த்தை பேசிய... திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் மீது வழக்குப்பதிவு
சென்னை ராயபுரம், 51 வது வார்டில் திமுக கவுன்சிலராக நிரஞ்சனா உள்ளார். இவருடைய கணவர் ஜெகதீசன்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராயபுரம் ஜேபி கோவில் தெருவில் தனது ஆதரவாளர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அன்று இரவு அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கும்பலாக நின்று இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை போலீசார் தியாகராஜன் மற்றும் மணிவண்ணன் பார்த்தனர். அருகில் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் போலீசாருக்கும், ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த தகராறில் போலீசாரை ஜெகதீசன் தகாத வார்த்தையால் திட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் தகாத வார்த்தையால் பேசுவதை போலீசார் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில், இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர் தியாகராஜன் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக நிர்வாகி ஜெகதீசன் மீது புகார் எழுந்ததையடுத்து, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.