தேவையில்லாமல் சாலைகளில் சுற்றினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் விதிகளை மீறி சாலையில் சுற்றுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று நீலகிரி மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 350-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.
முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக சாலைகளில் சுற்றி திரிவதால் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, இன்று முதல் நீலகிரி மாவட்டத்திற்குள்ளும் காலை 10-க்கு மேல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இ-ரெஜிஸ்டேசன் கட்டாயம் தேவை.
இதனால் இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசியதாவது -
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 12 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
கூடலூரில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் திறக்கப்படும். 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூடுதலாக உள்ளது.
காலை 10-க்கு மேல் தேவையின்றி சாலைகளில் பொதுமக்கள் சுற்றுவதைத் தடுக்க இ-ரெஜிஸ்டேசன் இன்று முதல் கட்டாயமாக்கபட்டுள்ளது. இ-ரெஜிஸ்டேசன் இன்றி சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யபடுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.