'கரிசல் குயில்' கி.ரா மறைவு - கமல், கனிமொழி எம்.பி., திருமாவளவன், டிடிவி தினகரன் இரங்கல்!

tamilnadu-death-of-the-writer
By Nandhini May 18, 2021 05:27 AM GMT
Report

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது உடல் புதுச்சேரி, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

கரிசல் மண் சார்ந்த இவரின் எழுத்துக்களால் கி.ரா. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில்-

கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி. தனது இரங்கல் செய்தியில் -

‘’எழுத்தாளர் திரு.கி.ரா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தூத்துக்குடி மாவட்டம், இடைச்செவல் கிராமத்தில் பிறந்த அவர், கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம், வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது இரங்கல் செய்தியில்-

நூற்றாண்டுகள் வாழ்ந்து நிறைவான பெருவாழ்வு கண்ட கரிசல் இலக்கியச் செம்மல் கி்ரா அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம். மக்கள் மொழியில் இலக்கியம் படைத்து இலக்கிய மொழியின் மரபை உடைத்து கரிசல் மண்ணுக்குப் பெருமைச் சேர்த்த கனித் தமிழின் #காலக்கொடை! வாழ்க அவர் புகழ். வெல்க கரிசல் தமிழ் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் -

முதுபெரும் தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் திரு. கி.ராஜநாராயணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா அவர்களின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.