பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்!
கரிசல் இலக்கிய தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டு வந்த தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் இவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
கி.ராஜநாராயணன் கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்தார். 1958ம் ஆண்டு சரஸ்வதி இதழில் இவர் எழுதிய முதல் கதை வெளியானது. இவரது கதையுலகம் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவையாக இருக்கும். இவர் புதுச்சேரி பல்கல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர்.
கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அனைவராலும் போற்றப்படுகிறார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் நாவல்களை உள்ளிட்ட பல நாவல்களை இவர் எழுதியுள்ளார்.
கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1999ம் ஆண்டு இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும், கனடா நாட்டின் உயரிய விருதுகள் உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.